அமெரிக்க விசா, கிரீன் கார்டு வேணுமா? இந்திய மாணவர்கள் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
கிரீன் கார்டு குறித்த சில கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
கிரீன் கார்டு
அமெரிக்காவில் படிப்பதற்கு பல நாடுகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் செல்கின்றனர். அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அங்கு சட்டவிரோத குடியமர்ந்தவர்களை வெளியேற்றி வருகிறார்.
மேலும் தற்போது, அமெரிக்காவில் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”உங்களின் சமூகவலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணிப்போம். யூதர்களுக்கு எதிராகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை விமர்சிப்பவர்களுக்கும் விசா மற்றும் குடியிருப்பதற்கான அனுமதி மறுக்கப்படும். உலகில் உள்ள எந்த தீவிரவாத இயக்கங்களுக்கும் அமெரிக்காவில் இடமில்லை.
கட்டுப்பாடுகள்
அவர்களுக்கு விசாவோ, க்ரீன் கார்டோ அனுமதிக்க இயலாது. யூத எதிர்ப்பு, யூத எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்று சமூகவலைதளங்களில் செய்யப்படும் பதிவுகள், அமெரிக்காவால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், லெபனான் ஹிஸ்புல்லா, ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோருக்கு ஆதரவான பதிவை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம். இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இது அமெரிக்காவுக்கு கல்விக்காக வரும் மாணவர்களுக்கான விசா மற்றும் க்ரீன் கார்டு சேவைகளுக்கும் பொருந்தும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 300 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.