சீன மக்களுடன் அமெரிக்க ஊழியர்கள் உறவு கொள்ளக்கூடாது - அரசு உத்தரவு
அமெரிக்க அரசு ஊழியர்கள் சீன குடிமக்களுடன் பாலியல் உறவு கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ரகசியங்கள்
சீனாவில் உள்ள தனது பணியாளர்கள், பாதுகாப்பு அனுமதிகள் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், அந்நாட்டு குடிமக்களுடன் எந்தவொரு காதல் அல்லது பாலியல் உறவுகளையும் வைத்திருப்பதை அமெரிக்க அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன குடிமக்களுடன் ஏற்கனவே உறவுகளைக் கொண்டிருக்கும் அமெரிக்க பணியாளர்கள் மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்கள். அவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டால் அவர்கள் உறவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது தங்கள் பதவியை விட்டு வெளியேற வேண்டும்.
அரசு உத்தரவு
இதனை மீறுபவர்கள் உடனடியாக சீனாவை விட்டு வெளியேற உத்தரவிடப்படுவார்கள். இந்தக் கொள்கை அறிவிப்பு ஜனவரி மாதம் சீனாவில் உள்ள அமெரிக்க பணியாளர்களுக்கு வாய்மொழியாகவும், மின்னணு முறையிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பகிரங்கமாக பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை.
இந்த அறிவிப்பு சீனாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க பணியாளர்களுக்குப் பொருந்தாது. ஆனால், மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் உள்ளூர்வாசிகளுடன் டேட்டிங் செய்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது அசாதாரணமானது அல்ல.
அமெரிக்க ரகசியங்களை அணுகுவதற்கு பெய்ஜிங் தொடர்ந்து பெண்களை பயன்படுத்துவதாக அமெரிக்க இராஜதந்திரிகளும், உளவுத்துறை நிபுணர்களும் கூறுகின்றனர். இந்தத் தடை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.