'எனிக்கு வேணம்' கேரளாவில் கால்பதித்த பாஜக - சைபர் தாக்குதலுக்கு ஆளான நடிகை!
நடிகை நிமிஷா சஜயன் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
சுரேஷ் கோபி
கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் முதல் முறையாக அம்மாநிலத்தில் பாஜக கால்பதித்துள்ளது.
இதையடுத்து திரையுலகினர் பலரும் சுரேஷ் கோபிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், மலையாள நடிகை நிமிஷா சஜயன் சமூக வலைத்தள தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது "எனக்கு திருச்சூர் வேண்டும்.. எனக்கு திருச்சூரை தரணும்” போன்ற கோஷங்களை சுரேஷ்கோபி மக்களிடம் முன்வைத்திருந்தார். இதே கோஷங்களை கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த தேர்தலில் சுரேஷ் கோபி தோல்வியை தழுவினார்.
சைபர் தாக்குதல்
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிஏஏ மசோதாவை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிமிஷா சஜயன் "எப்படி திருச்சூர் வேண்டும் என்று கேட்டவருக்கு திருச்சூரை நாம் கொடுக்கவில்லையோ,
அதேபோல இப்போது இந்தியா வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் நாம் அதை கொடுக்கக்கூடாது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்ற நிலையில், அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும், நிமிஷாவின் சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு சைபர் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
இதனால் அவர் தனது கமெண்ட் செக்சனை ஆப் செய்து வைத்துள்ளார். நடிகை நிமிஷா சஜயன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.