முன்னாள் காதலியுடன் பழக்கம் - மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞர்கள்!
மருத்துவ மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
வேலூரைச் சேர்ந்தவர் ரோகன். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் கல்லூரி எதிரே உள்ள ஒரு டீ கடையில் இரவு டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் ரோகனை இந்தியில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து ரோகன் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
உடனே, பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் துப்பாக்கி வைத்திருந்த இருவரையும் பிடிக்க ஓடி வந்தனர். உடனே இருவரும், அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், பொதுமக்கள் விரட்டிச் சென்று அதில் ஒருவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கொலை முயற்சி
தொடர்ந்து விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கஜராஜ் பிரதாப் பால் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், காசியாபாத்தைச் சேர்ந்த அமித்குமாரை விஜயவாடா ரயில் நிலையத்தில் கைது செய்தனர். அதன்பின் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,
அமித் குமார் அவருடன் உத்தர பிரதேசத்தில் பள்ளியில் ஒற்றாக படித்த பெண்ணை 7-ம் வகுப்பு முதல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் அவரிடம் நட்பாக பழகியுள்ளார். தற்போது அந்த மாணவி முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்காக சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு சக மாணவரான ரோகனுடன் பழகியுள்ளார். இதுகுறித்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ் படங்களைப் பார்த்து அமித்குமார் ஆத்திரம் அடைந்து இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.