அமெரிக்கா துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த தன் தோழியின் ரத்ததை உடலில் பூசி கொலையாளியை ஏமாற்றி உயிர் பிழைந்த சிறுமி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21பேர் உயிரிழந்தனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் பள்ளியில் 18 வயது இளைஞரான சால்வடொர் ரமொஸ் கையில் துப்பாக்கியுடன் 4-ம் வகுப்புல் நுழைந்து அங்கிருந்த சிறுவர்களை சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.
இந்த துப்பாக்கிச்சூடில் 19 குழந்தைகள் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.
அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடுச் சட்டம் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது அந்த இடத்தில் இருந்த 11 வயது மிஹா என்ற சிறுமி ஒருவர் சாதூரியமாக செயல்பட்டு உயிர்பிழைத்துள்ளார்.
சிறுவர்கள இருந்த வகுப்புக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சால்வடொர் கண்ணில் தென்பட்ட குழந்தைகளை சரமாரியாக சுட்டுள்ளான். அப்போது, வகுப்புக்குள் இருந்த 11 வயதுடைய மிஹா செரில்லொ உடனடியாக தரையில் படுத்துக்கொண்டுள்ளார்.
சால்வடொர் துப்பாக்கியால் சுட்டதில் மிஹாவின் தோழிகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளனர், மிஹாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வலியை பொறுத்துக்கொண்டு உயிரிழந்த தனது தோழியின் உடலில் இருந்த ரத்தத்தை படுத்திருந்தபடியே மிஹா தனது உடலிலும், உடையிலும் பூசிக்கொண்டு உயிரிழந்தது போல அசைவின்றி தரையில் படுத்துக்கிடந்துள்ளார்.
இதனால், வகுப்பறையில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கருதிய குற்றவாளி சால்வடொர் வகுப்பறையில் இருந்து வெளியேறினான் அப்போது அவனை போலீசார் சுட்டுவீழ்த்தினர்.
இதன் பின்னர் வகுப்பறைக்குள் உயிரிழந்த சக சிறுமிகளுடன் காயம் மற்றும் அதிர்ச்சியுடன் படுத்திருந்த மிஹாவை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டின்போது 11 வயது சிறுமி ஒருவர் பயத்தை பொருட்படுத்தாமல் சாதூரியமாக செயல்பட்டு உயிர் பிழைத்துள்ள செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.