தொழிலதிபர் மனைவியை கொன்ற உடற்பயிற்சியாளர் -அரசு அலுவலகத்தில் நடந்த கொடூரம்!
தொழிலதிபரின் மனைவியைக் கொலை செய்து அரசு அலுவலக வளாகத்தில் புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர்
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மனைவி காணாமல் போனதாகக் கடந்த ஜூன் மாதம் கோட்வாலி காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காவல்துறை சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் உடற்பயிற்சியாளர் விமல் சோனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனர். அதில் உடற்பயிற்சியாளர் சோனிக்குத் தொழிலதிபரின் மனைவியுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது .
இதனால் இருவரும் அவப்பொது தனிமையிலிருந்துள்ளனர். இந்த சுழலில் உடற்பயிற்சியாளர் சோனிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அந்த பெண் மன உளைச்சலானதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கொலை
இந்நிலையில், தொழிலதிபரின் மனைவி உடற்பயிற்சியாளர் சோனியைச் சந்தித்துப் பேசுவதற்காக, சம்பத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் காரில் அமர்ந்து பேசியுள்ளனர். இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முற்றியது.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த சோனி தொழிலதிபரின் மனைவியின் கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சோனி, தொழிலதிபரின் மனைவியை விஐபி சாலை டிஎம் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அலுவலக வளாகத்தில் புதைத்ததாகப் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதையடுத்து, இன்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோனியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.