ரயிலில் ரிசர்வேஷன் செய்தும் பிரயோஜனமில்லை; பெருகும் அபராதங்கள் - என்ன தீர்வு?
முன்பதிவு செய்த பெட்டிகளில், முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்த பயணிகள் ஏறுவது அதிகரித்துள்ளது.
ரிசர்வேஷன்
தமிழகத்தின் பல பகுதிகளில், பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல ரயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ரயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு, ரிசர்வேஷன் செய்திருக்கும் பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுநாள்வரை வடமாநிலங்களில் மட்டுமே இப்படியான சிக்கல்கள் இருந்துவந்த நிலையில், சமீப காலமாக தமிழ்நாட்டிலும் நிலவி வருகிறது.
மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில், ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில், வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி உட்கார்ந்து கொள்வதாகவும், சிலசமயம், ஏசி கோச், ஸ்லீப்பர் கோச்களிலும், திடீரென ஏறிவிடுவிடுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தொடரும் சிக்கல்
ரயில் நிலையங்களில் 600 முதல் 700 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. ஆனால், ஒரு விரைவு ரயிலில் 2 முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன. கடந்த வருடம் மட்டும், சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில், சுமார் 400 முதல் 500 பயணிகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் எடுத்துவிட்டு,
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறியதாக அபராதம் செலுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை - திருச்சி, சென்னை - சேலம், சேலம் - கோவை போன்ற குறுகிய தூர வழித்தடங்களுக்கும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் கூடுதலாக மெமு மற்றும் அந்தியோதையா ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.