இனி ஈஸியா எடுக்கலாம்..! ரயில் நிலையங்களில் இன்று முதல் அசத்தலான வசதி!
ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வசதி
இந்தியன் ரயில்வே பயணிகள் வசதியை மேம்படுத்த பல்வேறு வசதிகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றுமுதல் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க ஆன்லைன் மூலமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.
இந்தியன் ரயில்வே பொறுத்தவரை முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக இருக்கிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலம் எடுத்தால் அதற்கும் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கலாம்.
யுபிஐ மூலம்
ஆனால், முன்பதிவு இல்லாத டிக்கெட்களை கவுண்டரில் எடுத்தால் அங்கே யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியாது. பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க முடியும். இந்நிலையில் இன்று ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தால் ரொக்கமாகப் பணம் தர வேண்டிய அவசியமில்லை. யுபிஐ மூலம் மொபைலில் இருந்தே அனுப்பிவிடலாம். இந்த புது வசதி பயணிகளுக்கு பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.