பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனை எரித்துக் கொலை - காதலனின் கொடூர செயல்!
பாரிஸ் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உகாண்டா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா சேர்ந்தவர் ரெபேக்கா.இவருக்கு வயது 33.கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உகாண்டா சார்பில் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி கலந்து கொண்டார்.
அதில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர் 44-ஆவது இடத்தைப் பிடித்து இருந்தார். இதனையடுத்து டிக்சன் எண்டிமா என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நாடு திரும்பிய ரெபேக்காவும், அவரின் காதலனும் இடம் ஒன்றை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி ரெபேக்கா மீது காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் 75 விழுக்காடு தீக்காயம் அடைந்தார்.
எரித்துக் கொலை
இதனையடுத்து ரெபேக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஒலிம்பிக் குழுத் தலைவர் டொனால்ட் ருகாரே கண்டனம் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,'' தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி துரதிர்ஷ்டவசமானது.ஒரு கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம் .அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.