கட்சி நிகழ்வுகளில் ஆப்சென்ட் - அதிருப்தியில் உதயநிதி ஸ்டாலின்?
தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் மீது லேசான அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்
ஜூன் 1 அன்று மதுரையில் நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழுவில் உதயநிதி ஸ்டாலின் திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதற்கு நேர்மாறான செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த மே 3 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் திமுக பொதுக்குழுவைக் கூட்டுவது; ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்து நான்காண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதற்காக 1244 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. திமுகவினுடைய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.
அதே நாள் மாலையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைத்ததற்காக மாநில சுயாட்சி நாயகருக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் அந்த விழா நடைபெற்றது.
கட்சி நிகழ்வுகளை புறக்கணிப்பு
அதிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. கட்சி நிகழ்வுகளில் உதயநிதி ஸ்டாலின் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், அவரது உதவியாளர் செந்தில் தலைமையில் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதே போல மானியக் கோரிக்கைக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தனது துறைக்கான மானியக் கோரிக்கையை கூட உதயநிதி தாக்கல் செய்யவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் முதலமைச்சரே மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். இப்போது தொடர்ச்சியாக உதயநிதி கட்சி நிகழ்வுகளை புறக்கணிப்பதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, கட்சிக்குள் சீனியர்களின் அதிகாரம் குறையாமல் இருப்பது போன்ற காரணத்தால் உதயநிதி அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். தேர்தல் பணிகளை திமுக தொடங்கியிருக்கும் நிலையில் கட்சியின் எதிர்காலமாகக் கருதப்படும் உதயநிதியின் ஆப்சென்ஸ் திமுக தலைமைக்கு பிரச்னையைத் தரலாம். அதனை எப்படி சரி செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.