தாலியை கழட்டி.. வரலாறு காணாத அத்துமீறல் இது - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் தாலியை கழட்டி வைத்துவிட்டு வரச்சொல்வது எல்லாம் அத்துமீறல் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பெண்கள் நகைகள், தாலி உட்பட கழட்டி வைத்துவிட்டு தேர்வெழுத சென்றார்கள் என நீட் நுழைவுத்தேர்வு சோதனை குறித்த பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், , ” நீட் வந்த நாள் முதல் குளறுபடி தான். கடந்த வருடம் கூட உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கண்டனங்களை எதிர்கொண்டது. நீட் தேர்வில் முறைகேடு மட்டுமல்ல ஒழுங்கீனமும் நடைபெறுகிறது.
அமைச்சர் கொந்தளிப்பு
நீட் தேர்வு நடைபெறும் போது மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவி தாலியை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சொல்லும் விதிமுறை எல்லாம் இதுவரை வரலாறு காணாத அத்துமீறல்.
அந்த கணவரே தன் மனைவியின் தாலியை கழட்டி செல்லும் துர்பாக்கிய நிலை தான் நீட் தேர்வில் நடந்துள்ளது. முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை, நீட் நீட்டாக நடந்து கொண்டிருக்கிறது என புலமையாக பேசுகிறார். இவர்காளால் தான் நீட் வந்தது என நாடறியும். நீட் தேர்வால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதையும் நாடறியும்.
நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் என்னென்ன நடவடிக்கை எடுத்துவருகிறார் என்பதையும் நாடறியும். நீட் தேர்வை நியாயப்படுத்தும் வகையில் பேசுவது நாகரிகமான ஒன்றாக இருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.