4 வருடத்தில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை இதுதான் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில், சென்னை தியாக ராயநகரில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த 4 ஆண்டு ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
சாதனை, சாதனை என ஸ்டாலின் சொல்கிறார். அவரது மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது தவிர வேற எந்த சாதனையும் செய்யவில்லை. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு, மன்னராட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல்.
உங்களுக்கு ஏன் பதற்றம்?
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் கூட்டணி வைத்தீர்கள்? என்று ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்னைப் பார்த்து கேட்கிறார். இது எங்களுடைய கட்சி. வாக்குகள் சிதறாமல் வெற்றி பெறப்போகும் வெற்றிக் கூட்டணி. உங்களுக்கு ஏன் கோபம், பதற்றம் வருகிறது?
1999ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? அப்போது பாஜக நல்ல கட்சி. இன்றைக்கு அதிமுக கூட்டணி வைத்தால் சரி இல்லையென சொல்வது எந்த விதத்தில் சரி? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பீர்கள். உங்களுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது.
ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்ற ஸ்டாலினின் கனவு, கானல் நீராகிவிட்டது. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் பொழுது அதிமுக எவ்வளவு பலமான கூட்டணி அமைத்திருக்கிறது என ஸ்டாலின் தெரிந்து கொள்வார்.
அதிமுகவை மிரட்டி பணிய வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இரு கட்சி களும் மகிழ்ச்சியாக கூட்டணி அமைத்திருக்கிறோம். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என. பேசினார்