தூக்கத்தில் பேரனைத் திட்டிய மூதாட்டி -இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கொடூரம்!
திருச்சி அருகே இரும்பு கம்பியால் அடித்து மூதாட்டியைக் கொன்றதாகச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. 94 வயதாகும் மூதாட்டி மருமகள் பானுமதி (70)யும், பேரன் முரளி ராஜா(43) வும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016ல் அவரது தந்தை பத்மநாபனைக் கொன்ற வழக்கில் துறையூர் காவல்துறை முரளி ராஜாவைக் கைது செய்தது.
அதன் பிறகு இந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு முரளி ராஜா விடுதலை செய்யப்பட்டார். இந்த சூழலில் நேற்று முன்தினம் தனது தாயாரிடம் கோழிக்கறி சமைத்துத் தரும்படி முரளி ராஜா தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது .
புரட்டாசி மாதம் என்பதால் இதற்கு முதலில் மறுத்த அவரது தாய், பின்னர் மகனின் வற்புறுத்தலால் கோழி கறி சமைத்துத் தந்துள்ளார். தொடர்ந்து நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தன் தாயை எழுப்பி செலவுக்குப் பணம் தரும்படி முரளி ராஜா கேட்டு தகராறு செய்துள்ளார்.
மூதாட்டி
அப்போது அவரது பாட்டி நாகலட்சுமி, தூக்கத்திலிருந்து எழுந்து பேரனைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி ராஜா, இரும்பு கம்பியால் பாட்டி தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் நாகலட்சுமி உயிரிழந்தார்.
இதனைக்கண்ட முரளி ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இந்த சம்பவம் குறித்து பானுமதி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். துறையூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் காவல்துறை மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிந்து தலைமறைவான முரளி ராஜாவைத் தேடி வருகின்றனர்.