தொடர்கதையாகும் ரயில் விபத்துகள்..மீண்டும் அசாமை உலுக்கிய கொடூரம் -பேரதிர்ச்சியில் மக்கள்!
அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 3:55 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அசாம்
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (ரெயில் வண்டி எண் 12580) இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை 7 மணியளவில் அகர்தலாவில் இருந்து இந்த ரயில் புறப்பட்டது.
அப்போது அசாமில் உள்ள திபாலாங் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் உட்பட மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ரயிலில் பயணித்த சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விபத்து
ரயில் விபத்து குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ,அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் விபத்தில் சிக்கியது உண்மை தான்.ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்போது ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.