நெஞ்சு வலியால் சாலையில் சரிந்த இளைஞர் - உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்
நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.
போராடிய இளைஞர்
துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு அருகே போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நெஞ்சைப் பிடித்தவாறு வாகனத்துடன் சாலையில் சரிந்து விழுந்துள்ளார்.
குவியும் பாராட்டு
இதைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியபோது, மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். உடனே, அந்த இளைஞரை தூக்கிச் சென்று அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டது.
பின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணையில், இளைஞர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீஸாரையும் அப்பிரிவு துணை ஆணையர் (தெற்கு) பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.