ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வேண்டும் - வழக்கு போட்ட ஐடி ஊழியர்!
ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதிக்க வேண்டி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மது விற்பனை
சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளது. இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்கிறது.
டாஸ்மாக்கில் ஊழல் நிலவுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக இருக்கிறது.
மனு தாக்கல்
டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்கின்றனர்.
மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.