மதுபானங்கள் ஹோம் டெலிவரி - லிஸ்டில் தமிழ்நாடும்.. களத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ!
ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபான விற்பனையைச் செய்யாவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மதுபான விற்பனை
இந்தியாவில் முதலில் உணவு மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மளிகை பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இச்சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்விகி, பிக் பாஸ்கட், ஜொமெட்டோ, பிளிங்இட் தளங்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன.
ஆன்லைன் டெலிவரி
அதன்படி, முதலில் குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர், ஒயின் போன்ற மதுபானங்களை டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டன.
இருப்பினும், இப்போது இந்த மாநிலங்களில் பெரிய டெலிவரி நிறுவனங்கள் யாரும் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதில்லை. தொடர்ந்து, மத்திய - மாநில அரசின் ஒப்புதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.