வேகமெடுக்கும் நிபா வைரஸ்; சிறுவன் மரணம் - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
நிபா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நிபா வைரஸ்
கேரளா, பாண்டிக்கோடு அருகே 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது புனே தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் உறுதியானது. மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையில், சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெறிமுறைகள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.
- அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.
- ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
-
காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.