கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ் தமிழ்நாட்டுக்குள்ளும் என்ட்ரியா? அதிர்ச்சியில் மக்கள்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதில் 26 ஆயிரம் கேஸ்கள் கேரளாவில் மட்டுமே பதிவாகியிருப்பது தான் சோகமான செய்தி.
நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்ட போதிலும் கேரளாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட அச்சமே அகலாக சூழலில் தற்போது அங்கு மீண்டும் நிபா வைரஸ் நுழைந்துள்ளது மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன் நேற்று காலை உயிரிழந்த சம்பவம் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு-கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சோதனைச்சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இச்சூழலில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு மாவட்டமான கோவையில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வலம் வந்தன.
ஆனால் இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்த சமீரன், “கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் உயிரிழந்ததையடுத்து எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து கோவைக்கு வரும் 13 வழிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
உடல் வெப்பநிலை சோதனையும் நடத்தி வருகிறோம். கோவையில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படவில்லை” என்றார். இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.