கூடுதலாக 500 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம் - தமிழக அமைச்சரவையில் முடிவு!
தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுக்கடைகள்
தமிழக அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக்கிற்கே செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகவும், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கவும் எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாமல், ஆளுங்கட்சி கூட்டணி கட்சிகளே எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற அக்டோபர் 8-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசு முடிவு
குறிப்பாக மேலும் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்பின், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,329 ஆக குறைய வாய்ப்புள்ளது. திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.
மேலும் பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சுமார் 300 முதல் 400 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதுதவிர, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.