90 மில்லி டெட்ரா பேக், மதுக்கடை முன்கூட்டியே திறப்பு; சிதைச்சுட்டீங்க - கொதித்த ராமதாஸ்!
90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் போராட்டம் நடத்தப்படுமென ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
90 மி.லிக்கு பாக்கெட் மது குறித்தும், காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்கே மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்தும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தார். தொடர்ந்து, இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மிலி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கொதித்த ராமதாஸ்
விலைவாசி உயர்வால் உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாமலும் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பற்றி கவலைப்படாமல், 180 மிலி மதுவை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காமல் காத்திருக்கும் குடிமகன்களைப் பற்றி கவலைப்படுவதா அமைச்சரின் பணி? காலையில் வேலைக்கு செல்பவர்கள் இரவே மது வாங்கி வைத்து பத்திரப்படுத்த முடியாது என்று சான்றிதழ் வழங்குவதா அமைச்சரின் பணி?
90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்!
— Dr S RAMADOSS (@drramadoss) July 11, 2023
தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மிலி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின்…
மதுவிலக்குத்துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்ட போது, மதுவைக் கட்டுப்படுத்துவதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டது.
90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.