பொன்முடிக்கு பதவி பிரமாணம்; ஆளுநர் ரவி மறுப்பு - இதனால் தான்!
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொன்முடி பதவி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006 - 2011 வரை திமுக ஆட்சியில் இதே துறையில் அமைச்சராக இருந்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விழுப்புரம் ஊழல் தடு்ப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ல் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, 2017-ல்சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்தது. அதன் விசாரணையில், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சிறை தண்டனை பெற்றதால் பொன்முடி தனது அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார்.
ஆளுநர் மறுப்பு
அதன்பின் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். உடனே, ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதன்பின் தற்போது அவர் சென்னை திரும்பிய நிலையில், முதல்வரின் பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் நிரபராதி என நீதிமன்றம் கூறவில்லை. எனவே, அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.