பொய்ச்சொல்வதை தான் ஆளுநர் தொழிலாக கொண்டுள்ளார்!! அமைச்சர் பொன்முடி !!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சங்கரய்யாவைப் பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டாலும் கேட்டிருக்க வேண்டும் என்று கூறி, 9 ஆண்டு காலம் சிறையில் இருந்த சுதந்திர போராட்ட வீரரான ஒருவருக்கு, 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் என்.சங்கரய்யாவுக்கு ஒரு கவுரவ டாக்டர் பட்டம், சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை, மறுத்துவிட்டார் என குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை என்று விமர்சித்த அவர், திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிப்பதில்லை என்று கூறி, அதன் காரணமாக தான் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார் என தெரிவித்தார்.
பொய் சொல்வதே வழக்கம்
ஆனால் முதல்வர் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று ஆளுநர் கூறுகிறார் என்பதை சுட்டிக்காட்டி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் உதவுவதுதான் தமிழகத்திலுள்ள ஆட்சி என கூறினார்.
நடிப்பு சுதேசிகளாக ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது என சாடிய பொன்முடி, சுதந்திப் போராட்ட தியாகிகள் மீது ஆளுநருக்கு அக்கறை இருந்தால் கொடுக்க வேண்டாமா? ஏன் கொடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், காந்தியடிகளையே வேண்டாம் என்று கூறியவர்கள் இயக்கத்தில் இருந்து ஆளுநர் வந்ததால் தான் அந்த வெறித்தனத்தில் பேசுகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநரின் செயல்கள், பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என சுட்டிக்காட்டி, இதனால்தான், தினமும் பொய் சொல்வதையே தனது தொழிலாக கொண்டிருக்கிறார் ஆளுநர் என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர்,சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, நாளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் என்று கூறினார்.