இதனை செய்யாவிட்டால்.. ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும் - முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில், ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அனைவரும் இதனை பின்பற்றவில்லை.
விரல் ரேகை முக்கியம்
இதனைத் தொடர்ந்து, தற்போது குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொருட்கள் அளவு குறைக்கப்படும். பெயர் நீக்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உணவுத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “மத்திய அரசு முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் விவரங்களை ஆண்டுதோறும் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களையும் சரிபார்க்கும் வகையில், இந்த பதிவு நடைபெறுகிறது.
யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் அவர்கள் வராவிட்டால் வீட்டுக்கே சென்று விரல் ரேகை பதிவை பெறவும், தேவைப்பட்டால் முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.