10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்கனும் - அப்போ தமிழக பாஜக தலைவர் தகுதி யாருக்கு?
பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர்
தமிழ்நாடு பாஜகவின் தலைவர் பதவிக்கான விருப்ப மனு நாளை விநியோகிக்கப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று இரவு சென்னை வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி?
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். 3 பருவம் தீவிர உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவர்.
இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை மறுநாள் பாஜகவின் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.