காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவுக்கு புதிது அல்ல - அண்ணாமலை கண்டனம்!
காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு
மேகேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவதுதிமுகவுக்குப்புதிதும் அல்ல என்று தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “மேகேதாட்டு அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி,வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, திமுக அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரைவார்த்ததன் விளைவு, இன்று, மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி. கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல.
மேகேதாட்டு விவகாரம்
காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவுக்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக, உடனடியாக தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.