இன்பநிதிக்கு பாசறை; சஸ்பெண்ட் செய்த திமுக - இப்போ அதிமுகவிற்கு தாவல்!
திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இன்பநிதி பாசறை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து வீரராக உள்ளார். இவர் திமுகவில் இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லை.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களுடன் இன்பநிதி படமும் இடம்பெற்ற போஸ்டர் ஒன்று வைரலாகியது. அதில், மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை” என்ற பிழையான வாசகங்களும், ’இன்பநிதி பாசறை’ எதிர்காலமே... என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தது.
அதிமுகவில் திருமுருகன்
இதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் உள்ள முக.திருமுருகன் மற்றும் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் க.செ.மணிமாறன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போஸ்டருக்கு விமர்சனங்கள் குவிந்த நிலையில், இவர்களை சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.