திமுக இளைஞரணி மாநாட்டில் கவனம் பெற்ற இன்பநிதி - தற்போது என்ன செய்கிறார்?
திமுக இளைஞரணி மாநாட்டில், உதயநிதியின் மகன் இன்பநிதி பங்கேற்றார்.
திமுக இளைஞரணி மாநாடு
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் – பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.
இதில், அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி திமுக இளைஞரணிச் சின்னம் பொறித்த டி -சர்ட் அணிந்து வந்திருந்த அவரை அடையாளம் கண்ட திமுகவினர், ஆரவாரம் செய்தனர். மாநாட்டு மேடையில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
இன்பநிதி
அந்த வரிசைக்குப் பின் வரிசையில் இன்பநிதியும் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில், மாநாட்டில் மேடையின் கீழே அமைக்கப்பட்டிருந்த விவிஐபிக்களுக்கான வரிசையில் இன்பநிதி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், அவரது மனைவி செந்தாமரை உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெரிதும் கவனம் பெற்ற இன்பநிதி கல்லூரி மாணவராகவும், கால்பந்தாட்ட வீரராகவும் உள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். ஸ்பெயினின் Neroca FC கால்பந்து அணி வீரராகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் இதுவரை எந்த நேரடி அரசியலிலும் ஈடுபடவில்லை என்றாலும் திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.