ஒரே மேடையில் விஜய் திருமாவளவன் - அரசியலில் அதிரடி திருப்பம்
விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கைகளை அறிவித்ததோடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அவர் பேசியது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக விசிக தலைவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். விசிக இல்லாமல் திமுக வட மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது என விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுக வட்டாரத்தில் கோபத்தை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜுனா மீது விசிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோரிக்கை வைத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை ஆதவ் அர்ஜுனா வரவேற்று பேசி இருந்தார். அதே நேரம் திருமாவளவன் இதை விமர்சனம் செய்ததோடு திமுக கூட்டணியில் தொடர்வோம் என கூறி இருந்தார்.
விஜய் திருமாவளவன்
இதைத்தொடர்ந்து விஜய்யும் திருமாவளவனும் ஒரே மேடையில் பேச உள்ளனர் என்ற தகவல் மறுபடியும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளான டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னணியில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு உள்ளது என்று உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.