வெடிக்கும் திமுக விசிக மோதல் - மௌனம் காக்கும் திருமா; பின்னணி என்ன?
திமுக விசிக கூட்டணியில் மோதல் போக்கு உள்ள நிலையில் திருமாவளவன் மௌனமாக உள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு
கடந்த சில வாரங்களாகவே திமுகவிற்கும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
விசிக சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த போதே விசிக அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா என பேச்சு எழுந்தது.
ஆட்சியில் பங்கு
அந்த சலசலப்பு அடங்கும் முன் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசி அடுத்த அதிர்வலையை ஏற்படுத்தினார் விசிக தலைவர் திருமாவளவன். ஆனால் இது விசிகவின் கொள்கை, மது ஒழிப்பு மாநாடு சமூக பிரச்னை இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்தார்.
அதன் பின் மற்றொரு நிகழ்வில் பேசிய திருமாவளவன், மது ஒழிப்பு கொள்கையால் அரசியல் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் வரட்டும் என பேசினார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
இதன் பின் விசிக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டியில், ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா என உதயநிதி ஸ்டாலினை தாக்கி பேசினார்.
மேலும், விசிக இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக ஜெயிக்க முடியாது, கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் வேண்டும், அமைச்சரவையில் இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும், ரூ.1000 மகளிர் உதவி தொகை மதுக்கடைகளுக்கே செல்கிறது என பேசினார். இவரின் பேச்சு திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
ஆ.ராசா எதிர்ப்பு
இது குறித்து பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.
கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இது போன்ற பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
விசிக எதிர்ப்பு
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விசிகவின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதவ் அர்ஜூன பேசியது உண்மைக்கு மாறானது, மற்றும் அரசியல் ரீதியில் பக்குவமில்லாத பேச்சு என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுனாவின் கருத்தில் உடன் பாடு இல்லை திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பதிலடி
விசிகவின் மூத்த தலைவர்கள் கண்டித்துள்ள நிலையிலும், இன்று ஆ.ராசாவிற்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, விசிக அதிகார பரவலை நோக்கி செல்வது எப்படி பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அமையும், எங்களை விட கடுமையாக இங்கு பாஜகவை எதிர்ப்பதற்கு யார் உள்ளது?
பாஜகவை பற்றி பேசினால் ஆன்டி இந்தியன் என எச்.ராஜா செல்வது போல் அதிகார பகிர்வு குறித்து கேட்டால் இவர்கள் பாஜகவினர் சங்கிகள் என்ற தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். ஆ.ராஜா ஏன் சொந்த தொகுதியான பெரம்பலூரில் நிற்காமல் நீலகிரிக்கு அனுப்பப்படுகிறார்.அந்த சமூக நீதியைதான் நாங்கள் வலியுறுத்துகிறோம் என பேசியுள்ளார்.
திருமா மௌனம்
இந்நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. Voice Of Commons என்ற தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவர் தான் ஆதவ் ஆர்ஜுனா. கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை தொண்டர்களே வியக்குமளவுக்கு ஒருங்கிணைத்து வருகிறார் ஆதவ் ஆர்ஜுனா.
திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டின் பின்னணியில் இருந்ததும் இவர்தான. அந்த மாநாட்டில் கட்சியில் இணைந்த இவரை சில நாட்களில் விசிகவின் துணை பொதுச்செயலாளராக திருமாவளவன் அறிவித்தார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ள ஆதவ் அர்ஜூனா, இந்தியாவிலே அதிகளவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்டினின் மருமகன் ஆவார். லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது, ஆதவ் அர்ஜுனாவின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.