கூட்டணியில் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை - திருமாவளவன் அதிரடி
மதுவிலக்கு கொள்கையால் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் வரட்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது.
திமுகவின் கூட்டணியில் இருந்துகொண்டே, மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமாவளவன்
அந்த சலசலப்பு அடங்குவதற்குள், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியது அரசியலில் புயலை கிளப்பியது. இந்த மாநாட்டிற்கு தேர்தல் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை என திருமாவளவன் விளக்கமளித்தாலும், திமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுவதாக பலரும் கருதுகின்றனர்.
திமுகவுடன் கூட்டணி முறியுமா, அதிமுக கூட்டணியில் விசிக இணையுமா என பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மது ஒழிப்பு கொள்கையால் அரசியல் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் வரட்டும் என பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "தேசிய மதுவிலக்கு கொள்கையை ஏன் திமுக வலியுறுத்த கூடாது? அதிமுக ஏன் வலியுறுத்த கூடாது? காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஏன் இதனை ஒரு தேசிய கொள்கையாக கொண்டு வரக்கூடாது?
திமுக கூட்டணி
இப்படி பேசுவதால் திமுக உங்களை தப்பாக நினைக்காதா? கூட்டணியை முறிந்து விடுவீர்களா சார்? என ஊடகங்களில் கேட்கிறார்கள். இந்த கோரிக்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் தயாராக இருக்கிறோம்.
தனை உள்ளத்தூய்மையோடு சொல்கிறோம். எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை. இப்படி பேசுவதால் தேர்தல் அரசியல், கூட்டணி உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். பாதிப்புகள் வரலாம். பின்னடைவுகள் வரலாம். இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருப்பதாக நம்புகிறோம். திமுக கூட்டணியில் தொடர்வோம் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம் வேண்டும். திருமாவளவன் பயந்துட்டாரு என்று சொல்கிறார்கள். எங்களை பயமுறுத்த யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என பேசியுள்ளார்.
கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் கவலை இல்லை என திருமாவளவன் பேசியது மீண்டும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.