தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் - திமுகவிற்கு எதிராக அரசியலை தொடங்கிய விஜய்

Vijay Tamil nadu DMK Edappadi K. Palaniswami
By Karthikraja Nov 01, 2024 02:30 PM GMT
Report

நவம்பர் 1 ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக போற்ற வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்திய அக்கட்சி தலைவர் விஜய், மதத்தை வைத்து பிளவுபடுத்துபவர்கள் தனது கொள்கை எதிரி எனவும் திராவிட மாடல் அரசு தனது அரசியல் எதிரி எனவும் அறிவித்தார்.

விஜய் தமிழ்நாடு தினம்

மேலும் ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் தற்போது தமிழ்நாடு நாள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 1

இந்த பதிவில், "1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. 

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

vijay tamilnadu day

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்" என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு நாள்

கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது.

இந்நிலையில் விஜய் தனது பதிவில், தனி மாநிலம் பிறந்த நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாம் தமிழர், பாமக, அதிமுக போன்ற கட்சிகள் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கின்றன.