நபியை பற்றி யாராவது வாயை திறந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்று கூடும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!
திருச்சியில் இஸ்லாமியர்கள் நடத்திய கவன ஈர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நபிகள் குறித்து யாராவது வாயை திறந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்று கூடும் என தெரிவித்தார்.
நபிகள் குறித்து இழிவு பேச்சு
அண்மையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதுாறு கருத்தை தெரிவித்திருந்தார்.
இது உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாஜக கட்சியில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கவன ஈர்ப்பு மாநாடு
அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் ஜமாத்துல் உலமா சபை கவனஈர்ப்பு மாநாட்டை நடத்தியது.
இதில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு மற்றும் எம்.பிகள் தொல்.திருமாவளவன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்று கூடும்
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது போன்ற மாநாடு கூடுவது நமக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்துகிறது.
எப்படி பட்ட ஒரு நாடு,இந்த நாட்டில் இன்றைக்கு நாம் அண்ணன்,தம்பிகளாக,மாமன்,மச்சான்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதை சீர்குலைக்கின்ற வகையில் இன்றைக்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எப்படி பட்ட கருத்துகளை ஒன்றியத்தை ஆண்டு கொண்டு இருக்கிற கட்சியை சேர்ந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நான் பெருமைபடுகிறேன்.மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று இன்று தமிழ்நாடு முழுவதும் பெருமையோடு சொல்கிறோம்.
நபிகளை பற்றி இனி யாராவது வாயை திறந்தால் இந்த கூட்டம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்று கூடும் உங்களுக்கு எதிராக என்று கூறினார்.