தங்கம் தென்னரசு சொத்துக்குவிப்பு வழக்கு - கேள்விகளால் திணறடித்த நீதிபதி ஆனந்த்!
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கில் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
நீதிபதி சரமாரி கேள்வி
அதில், சாரணை அதிகாரியான பூமிநாதன் நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? என்றார் அதற்கு 7 ஆண்டுகள் என் பதில் கூற, இந்த ஏழு ஆண்டுகளில்,
வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா? 2016-ம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில் மனு தாக்கல் செய்யும்போது, மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா? 2021-ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என தோன்றியது ஏன்? என சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அதிகாரி, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதத்தின் அடிப்படையில், மேல் விசாரணை கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.
உடனே, நீதிபதி இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா... குப்பனுக்கும் கருப்பனுக்கும் இதே நடைமுறையை பின்பற்றுவீர்களா? எனக் கேள்வி எழுப்பி விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.