தமிழக வாழ்வுரிமை கட்சி வரலாறு - ஓர் பார்வை!
தமிழக வாழ்வுரிமை கட்சி 2012 ம் ஆண்டு தைப்பொங்கல் அன்று சென்னையில் அதன் நிறுவன தலைவர் தி.வேல்முருகனால் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் தலைமை அலுவலகமான திலீபன் இல்லம் சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது.
யார் இந்த வேல்முருகன்?
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் புலியூர் காட்டுசாகை கிராமத்தில் 1970 ல் பிறந்த இவர் சிறு வயதிலே தமிழ்நாடு விடுதலை படையால் ஈர்க்கப்பட்டு அதன் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்ற பொழுது அதில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
பாமக கட்சியில் திருவொற்றியூர் நகர செயலராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, கடலூர் மாவட்ட செயலாளர், இணை பொது செயலாளர் என கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
தேர்தல் பயணம்
1996 ல் முதல் முதலாக பாமக சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2001, 2006 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாமக சார்பில் பண்ருட்டி தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 இல் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகிய பின் தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். பாமகவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இவருடன் கட்சியில் இணைந்தனர்.
2016 ல் சுயேட்சையாக நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார். 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி
கூடங்குளம் அணுலை எதிர்ப்பு போராட்டம், திருநெல்வேலி பெப்சி ஆலை எதிர்ப்பு போராட்டம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை கண்டித்து போராட்டம், உயர் நீதி மன்ற நீதிபதி நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும் என பல பொது பிரச்சனைகளுக்கு போராடியுள்ளனர்.
காவேரி நதி நீர் பங்கீடு விவகாரம், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து போரட்டம், என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக பணியில் சேர்க்க, ரயில்வே, எல்.ஐ.சி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுத்தல் என பல தமிழர் நலன் சார் விசயங்களை கையிலெடுத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் தமிழர்கள் தாக்கப்படும் பொழுது அந்த மாநில எல்லைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் பெரும் மக்கள் ஆதரவை பெற்றுத்தந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நடத்தி வருகின்றனர். திராவிட இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் என அனைத்து அமைப்புகளின் தலைவர்களுடனும் சுமூக உறவை கொண்டுள்ள வேல்முருகன்,அவர்கள் நடத்தும் போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.