தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவார்கள் - இலங்கை முன்னாள் ஆளுநர் சர்ச்சை பேச்சு!
தமிழர்களைத் துண்டுத் துண்டாக வெட்ட வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பேசியுள்ளார்.
முன்னாள் ஆளுநர்
இலங்கை, இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களின் மயானத்தில் வீடுகளை உடைத்த கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சிங்கள மத துறவியும், முன்னாள் ஆளுநருமான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அங்குச் சென்று அதனை பார்வையிட்டார்.
சர்ச்சை பேச்சு
அதன்பின் பேசிய அவர், ‘’ மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மயானம் கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல.
நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் இலங்கை அதிபர், காவல் துறையினர் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்.
இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் துண்டுத் துண்டாக வெட்டுவார்கள்’’ எனப் பேசினார். இந்த பேச்சு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழ் அமைப்புகள் மற்றும் எம்.பிக்கள் அவரை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.