எங்கள் பார்ட்னர்; ஒரே கருத்தியலை சீமான் எடுத்துள்ளார் - தமிழிசை ஆதரவு
எங்கள் கருத்தியலை சீமான் எடுத்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சீமான் கருத்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியுள்ள கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை, சௌந்தரராஜன், “எங்கள் வழியில் வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக சொல்லிக்கொண்டிருந்தோமோ அதனை சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே இதனை எங்கள் கருத்தியலுக்கு கிடைத்துள்ள பலமாகவும், நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஒரு ஆதரவாகவும் இதனை பார்க்கிறேன்.
தமிழிசை ஆதரவு
இது பாஜகவும், பாஜகவின் கருத்தியலுக்குமான வெற்றியாக பார்க்கிறேன். உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு.
சீமான் இன்று, நாங்கள் பெரியபுராணம் படிக்கும்போது பிடிக்கவில்லை; பெரியார் புராணம் பிடிக்கிறதா என்று நாங்கள் என்ன சொன்னோமோ அதனை அவரும் தொடர்கிறார். இது மகிழ்ச்சி தான். பாஜக ஒன்று சொன்னாலே B டீமில் ஆரம்பித்து Z டீம் வரை போய்விடுகிறீர்கள்.
இது வெறும் கருத்தியலுக்கான ஆதரவு. டீம் என்று சொல்வதைவிட எங்களின் தீமை சீமான் எடுத்துள்ளார். எனவே டீம் பார்ட்னர் (Team Partner) என்றில்லாமல் தீம் பார்ட்னர் (Theme Partner) என எடுத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.