விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு பயம்; அதனால்தான் இப்படி.. தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!
விஜய்யை கண்டு தமிழக அரசு பயந்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இணக்கமாக இல்லை.
கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், வேல்முருகன், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கான பெருமை பெரியார், அண்ணாவையே சேரும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
விஜய் அரசியல் வருகை
பெரியார், அண்ணாவுக்கு முன்பே சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் போராடியுள்ளனர். இது அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். நடிகர் விஜய் அரசியல் வருகையால் பாஜகவுக்கு பின்னடைவு கிடையாது. விஜய்யை கண்டு தமிழக அரசு பயந்துள்ளது.
அதனால் தான் மாநாட்டுக்கு இடம் கொடுப்பதில் இருந்து அனைத்துக்கும் தடங்கல் செய்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது மிகவும் தவறானது. தனியார் பேருந்துகள் விஜய் மாநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே அரசு பேருந்துகளை வாடகைக்கு வாங்குகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.