தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா? தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
சிபிஐ விசாரணை
அப்போது பேசிய அவர் "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பு மிகுந்த மனவேதனையை தந்துள்ளது. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா?
தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டன. அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடர்கிறது. முதல்வரின் சொந்த தொகுதி குற்றங்களுக்கு புகலிடமாக மாறியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.