சீமான் பங்கேற்ற நிகழ்வில் மாற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - வெடித்த சர்ச்சை

Tamil nadu Chennai Seeman Puducherry
By Karthikraja Jan 05, 2025 02:35 AM GMT
Report

சீமான் கலந்து கொண்ட நிகழ்வில் வேறு தமிழ்த்தாய் பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 48வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்வில், தினமும் ஏராளமான மக்கள் புத்தகங்களை வாங்க படையெடுத்து வருகின்றனர்.  

தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகம்

இந்நிலையில் நேற்று(04.01.2025) 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

48வது சென்னை புத்தக கண்காட்சி - தேதி, இடம் உள்ளிட்ட முழு விவரம் அறிவிப்பு

48வது சென்னை புத்தக கண்காட்சி - தேதி, இடம் உள்ளிட்ட முழு விவரம் அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து

இந்த நிகழ்வின் போது ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாடல் பாடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து புத்தக கண்காட்சியை நடத்தி வரும் பபாசி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக பபாசி வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 48 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 9ஆம் நாள் நிகழ்வில் இன்று (04/01/2025) காலை சக்தி வை. கோவிந்தன் சிந்தனை அரங்கத்தில் பபாசின் உறுப்பினரான டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.  

தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகம்

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீமான் அவர்களை வரவழைத்து புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களின் புத்தக வெளியீட்டிற்கு வழங்கப்படும் வழக்கமான நடைமுறை. அதன்படி அவர்களுக்கு புத்தக வெளியீட்டுகு அனுமதி அளிக்கப்பட்டது.  

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தையே தூக்கிடுவேன் - சீமான்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தையே தூக்கிடுவேன் - சீமான்

பபாசி விளக்கம்

அந்த நிகழ்வில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" என விளக்கமளித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சில வரிகள் விடுபட்டு பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அப்போது இது குறித்து பேசிய சீமான், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என பேசியிருந்தார்.