48வது சென்னை புத்தக கண்காட்சி - தேதி, இடம் உள்ளிட்ட முழு விவரம் அறிவிப்பு
சென்னை புத்தக கண்காட்சி குறித்த அறிவிப்பை பபாசி வெளியிட்டுள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதி வாரம் மற்றும் ஜனவரியில் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறும்.
இது தமிழத்தில் நடக்கும் மிக பெரிய புத்தக கண்காட்சி நிகழ்வாகும். ஓவ்வொரு ஆண்டும் புத்தக பிரியர்கள் இந்த நிகழ்வை எதிர்நோக்கி காத்திருப்பர்.
17 நாட்கள் நிகழ்வு
இந்நிலையில், 48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குவதாக பபாசி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்குகிறார்.
மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும்.
10% தள்ளுபடி
இந்த புத்தகக் கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படும். மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
வாசகர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.10. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 லட்சம் விலையில்லா டிக்கெட் வழங்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கார்களும், 50,000 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரங்கங்கள்
பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.
உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.
ரூ.20 கோடிக்கு விற்பனை
ஒவ்வொரு நாள் மாலையிலும் அங்கு உள்ள சிந்தனை அரங்கில் தமிழகத்தின் சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்ற நீதிபதி) விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.
“கடந்த ஆண்டு 20 லட்சம் வாசகர்கள் வந்தார்கள். 20 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.