இந்த தப்பை செய்யாதீங்க - சுதா மூர்த்திக்கு தமிழக பூசாரி அட்வைஸ்!
சுதா மூர்த்தி பகிர்ந்துள்ள நெகிழ்ச்சி பதிவொன்று கவனம் பெற்று வருகிறது.
சுதா மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுவாமி மலை அருகே பயணித்தபோது இவரது கார் பழுதாகியுள்ளது.
எனவே, அருகிலுள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு, பார்வையற்ற பூசாரி ஒருவரும், அவரது மனைவியும் அவரை வரவேற்றுள்ளனர். தொடர்ந்து, கடவுளை தரிசித்ததும் தட்சனையாக 100 ரூபாயை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பூசாரி அந்த பணம் எங்களுக்கு அதிகம் எனக் கூறி வாங்க மறுத்துள்ளார். மேலும், 20 ஆயிரம் ரூபாயை பண உதவிக்காக அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதனையும் பூசாரி நிராகரித்துள்ளார்.
பூசாரி அட்வைஸ்
“நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார். உடனே ஏன்? என சுதா மூர்த்தி கேட்டதற்கு அவர், “இந்தப் பணத்தை நீங்கள் எனக்குக் கொடுத்தால் சுமையாகி விடும்.
கிராம மக்கள் இப்போது எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அதிகமான பணம் எங்களிடம் இருக்கிறது என தெரிந்தால் அவர்கள் எங்களை இறந்துவிட வேண்டும் என்று கூட நினைக்க கூடும். அதுமட்டுமல்லாமல் இது எங்களுக்கு உதவாது. கடவுள் எங்களுக்கு கொடுத்தது போதும்...” எனத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும் சுதா மூர்த்தி நெகிழ்ந்து போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.