நாடாளுமன்றத்தில் அடிதடி; எம்.பிக்கள் இடையே கடுமையான சண்டை - பதைபதைக்கும் காட்சி!
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் எம்.பிக்கள் அடிதடியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
எம்.பிக்கள் சண்டை
தைவானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் வில்லியம் லாய் சிங் தே போட்டியிட்டார்.அவரை எதிர்த்து சீன ஆதரவுடன் கோமிண்டாங் கட்சியின் சார்பில் ஹூ யு இஹ் போட்டியிட்டார். மற்றும், தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜே ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் வில்லியம் லாய் சிங் தே பெரும்பான்மை இல்லாத போதும் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் முக்கிய எதிர்கட்சிகளான கோமிண்டாங் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தார். இந்த சூழலில் லாய் சிங் தே இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க உள்ளார்.
நாடாளுமன்றம்
இந்த நிலையில் தைவான் நாடாளுமன்றத்தின் அரங்கத்தில் நிகழும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான எம்.பிக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதமும் நேற்று அரங்கேறியது. அப்போது திடீரென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருக்கட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளவும் தொடங்கினர். இதனால், நாடாளுமன்றத்திற்குள்ளேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அவையில் கூச்சல், குழப்பம் கைகலப்பு என படு மோசமான நிலைமை ஏற்பட்டது.
மசோதா மீது விவாதம் தொடங்குவதற்கு முன்பே எம்.பிக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் பலர் அவரின் மேஜையின் மேல் எழுந்து நின்று கீழே குதித்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.