செந்தில் பாலாஜி வழக்கு; EDயை கண்டித்த உச்சநீதிமன்றம் - நீதிபதி காட்டம்!
செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையை கண்டித்துள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது பேசிய நீதிபதிகள், “நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள்.
நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. அதற்கு நாங்கள் உங்களிடம் நேரடியான சாதாரண பதிலைத்தான் எதிர்பார்க்கிறோம். சுற்றி வளைக்காமல் பதில் சொல்ல வேண்டும். தற்போது எல்லாம் வழக்கறிஞர்களிடம் நாங்கள் கேள்வி கேட்டால் அதனை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
பென் டிரைவில் இருப்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்கள் தான் பதில் கூறவேண்டும் என்பதை நாங்களும் அறிவோம். நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. எனவே, தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம்.
இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.