அதிரவைத்த முறைகேடுகள்...நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்ற திட்டவட்டம்!!
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வு (NEET UG 2024) தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு
மே 5ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வை தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்ச மாணாக்கர் எழுதினார்கள். நாடு முழுவதிலும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
கடந்த ஜூன்14 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்த சூழலில், இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிரவைத்தன. மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நடைபெற்ற விசாரணைகளில் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டங்கள் நடைபெற்றதாகவும் வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது.
இந்த முறைகேடு ராஜஸ்தான் மாநிலம் மட்டுமின்றி குஜராத், ஜார்க்கண்ட் என பல இடங்களில் நடந்ததும் கண்டறியப்பட்டது. அதனை வைத்து நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பல எதிர்ப்புகள் எழுந்தன.
நீதிமன்றம் மறுப்பு
முறைகேடுகள் அதிரவைத்த சூழலை, தேர்தல் முடிவுகள் கவனம் பெற்ற ஜூன் 4-ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வெளியான முடிவுகள் இன்னும் பிரச்சனைகளை கிளப்பியது. ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பான செய்தி வெளியாகின.
இதனை தொடர்ந்து பல வழக்குகள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் குவிந்தன. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிப்பு என உறுதியாக தெரிந்தால் மட்டுமே மறுதேர்விற்கு உத்தரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு மீண்டும் நடைபெறவேண்டும் என தாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என குறிப்பிட்டு, தேர்ச்சி பெற்ற 1 லட்சத்தி 8 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு வேண்டும் என குறிப்பிட்டதை தெரிவித்தார்கள்.