நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து : ‘கத்தாரிடம் இந்தியா காலில் விழுந்து விட்டது’ - சுப்பிரமணியன் சாமி தாக்கு!
நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்த பாஜக நிர்வாகிகளால் இந்தியாவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இழிவான பேச்சு
முஸ்லிம்களின் இரை தூதரான நபிகள் நாயகம் குறித்து நவீன் குமார் ஜிண்டால் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இழிவான வகையில் கருத்துகளை தெரிவித்தனர். இதையடுதது பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா அண்மையில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது நபிகள் நாயகம் குறித்து இழிவான வகையில் கருத்துகளை கூறினார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பியது. அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.
அரபு நாடுகள் கண்டனம்
இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் பலவும் பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளன. கத்தார், துபாய், மற்றும் ஈரானிய துாதர்களை நேரில் அழைத்த அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தகைய சர்ச்சை கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்று இந்திய தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கத்தாரிடம் விளக்கம் அளித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, யாரோ ஒரு பா.ஜ.க. நிர்வாகி பேசிய கருத்துக்காக இந்தியா தலைகுனிய வேண்டுமா?
பா.ஜ.க. நிர்வாகி ஏதை வேண்டுமானாலும் பேசுவார், அதற்காக இந்தியாவின் மொத்த வெளியுறவுத்துறையும் பொறுப்பேற்க வேண்டுமா? இது என்ன நியாயம் என்பதுபோல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு நுபுர் சர்மா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.
சுப்பிரமணியன் சாமி தாக்கு
இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், “மோடியின் 8 ஆண்டுகள் ஆட்சியில், பாரத மாதா தலையை அவமானத்தால் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டுவிட்டோம், ரஷியர்களிடம் அடிபணிந்து விட்டோம், அமெரிக்காவிடம் குவாட் மீட்டிங்கில் பணிந்து விட்டோம்.
இதனால் பாரத மாதா தலையை அவமானத்தில் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் இப்போது கத்தார் என்ற சின்ன நாட்டிடம் இந்தியா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவு இது” என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!