காதலியை பார்க்க ஒவ்வொரு வாரமும் 8,652 கிமீ பயணம் - மாணவரின் காதலை வியக்கும் நெட்டிசன்கள்
கல்லூரி மாணவர் தனது காதலியை பார்க்க ஒவ்வொரு வாரமும் 8,652 கிமீ பயணம் செய்துள்ளார்.
கல்லூரி காதல்
கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், வாரம் ஒரு நாள் விடுமுறை இருந்தாலும் பயண நேரம், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீண்ட விடுமுறை நாட்கள் வரும் போது தான் பெரும்பாலும் வீட்டிற்கு செல்வார்கள்.
ஆனால் கல்லூரி மாணவர் ஒருவர், காதலியை பார்க்க வாரம் ஒரு முறை கண்டம் விட்டு கண்டம் தாண்டி 8,652 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளார்.
சீனா டூ ஆஸ்திரேலியா
சீனாவை சேர்ந்த ஜு குவாங், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆர்.எம்.ஐ.டி ஷு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் ஆவார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் படித்து வந்த அவரது காதலி படிப்பை முடித்துவிட்டு சீனா திரும்பி விட்டார். ஆனால் ஜு குவாங்கின் படிப்பு முடிய மேலும் 3 மாதங்கள் இருந்தது.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவருக்கு வகுப்பு இருக்கும். இந்நிலையில் தனது காதலியின் பிரிவை தாங்க முடியாத ஜு குவாங் ஒவ்வொரு வாரமும் சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்று வந்துள்ளார். சீனாவிலிருந்து 8,652 கிலோ மீட்டர் தொலைவில் ஆஸ்திரேலியா அமைந்துள்ளது.
3 நாள் பயணம்
ஓவ்வொரு வாரமும் அவரது பயணம் 3 நாட்களுக்கு நீடிக்கும். காலை 7 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு அவர் மறுநாள் மெல்போர்ன் வந்து வகுப்புகளில் கலந்துகொள்வார். அதன்பின் மூன்றாவது நாள் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்புவார்.
இந்த 3 மாதங்களில் அவர் 11 முறை சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளார். ஒவ்வொரு பயணத்திற்கும் அவர் 6700 சீன யுவன் (இந்திய மதிப்பில் ரூ.78,067) செலவு செய்துள்ளார். ஒவ்வொரு பயணத்தின் போதும் வெவ்வேறு விமான நிறுவனங்களின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தன் மூலம் சீனாவின் பல நகரங்களை பார்க்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
மாணவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "பக்கத்து ஊரில் உள்ள எனது கல்லூரியிலிருந்து கூட நான் எனது வீட்டிற்கு வார வாரம் பயணம் செய்ய மாட்டேன். காதலுக்காக இப்படி ஒரு அர்ப்பணிப்பை இதற்கு முன் நன் பார்த்ததில்லை" என நெட்டிசன்கள் வியக்கின்றனர்.