CSKவை விட்டு விலகுங்கள்..இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு BCCI ஸ்கெட்ச்!
ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக்க பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய அணி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் வரும் 2024 டி20 உலக கோப்பை தொடருடன் நிறைவடைகிறது. இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பிசிசிஐ விண்ணப்பங்கள் பெற முடிவு செய்துள்ளது. இதற்கு ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் பயிற்சியாளராக விண்ணப்பிக்க விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கான தகுதியுள்ளவர்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது .
பயிற்சியாளர் பதவி
இருப்பினும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணான ஸ்டீபன் பிளம்மிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ பிளம்மிங்கிடம் பேசி இருப்பதாக தெரியவந்ததுள்ளது. ஆனால் இதற்கு அவர் ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
இந்த சிஎஸ்கே அணி மட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஹண்ட்ரட் தொடரில் "சதர்ன் பிரேவ்" அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இந்த ஆண்டு ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்கின்றனர்.
எனவே இத்தனை வாய்ப்புகளை விட்டுவிட்டு இந்திய அணியுடன் அவர் இணைவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஸ்டீபன் பிளெம்மிங் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் அந்த அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.