கச்சத்தீவை திரும்ப இந்தியாவிற்கு ஒப்படைக்க மாட்டோம் – இலங்கை உறுதி!
இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதிலிருந்து இந்த விவகாரம் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை அண்மையில் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸும், திமுகவும் சதி செய்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இலங்கை உறுதி
அதன்பின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவிற்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது.
கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்பட்டுவிடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி,
கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே, கச்சத்தீவு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு எந்த காரணமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.