சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்; களமிறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் - சொன்னதை பாருங்க..
கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேசியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதிலிருந்து இந்த விவகாரம் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. இது அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஜீவன் தொண்டமான் விளக்கம்
அதன்பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுகவை சாடினார். மேலும், மத்திய அரசு கச்சத்தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கச்சத்தீவு விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை. கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை.
ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை பதில் அளிக்கும். கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என விளக்கம் தெரிவித்துள்ளார்.